July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டாம்’;வைத்தியர் சுதத் சமரவீர

Vaccinating Common Image

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கொரோனா தடுப்பூசியை ஏற்றி கொள்ளக்கூடாது என தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் தொற்று இருக்கலாம் என சந்தேகிப்பவர்களும் கொரோனா தொற்று உறுதியானவர்களும் இவ்வாறு கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் எந்த பயனும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே வைத்தியர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் உடம்பில் ஏற்கனவே கொரோனா வைரஸ் உள்ளமையால் தடுப்பூசி மூலமாக நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிப்பவர்களுக்கும் தடுப்பூசி போடுவதை தாமதப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் அறிகுறி அற்றவர்கள் மற்றும் குறைந்த அறிகுறிகளை காண்பிப்பவர்கள் வைத்தியசாலை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10 நாள் வரை தனிமைப்படுத்தப்படுவார்கள் என வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

10 முதல் 14 நாட்களுக்குள் வைரஸின் தாக்கம் குறைவடைவதுடன், நோயாளியிடமிருந்து ஏனையவர்களுக்கு தொற்று பரவல் அடைவது முற்றாக நீங்கிவிடும்.

எனவே 10 நாட்களின் பின்னர் கொரோனா தொற்றாளர்கள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படுவதுடன், வீட்டில் மேலும் 4 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்பு தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.