இலங்கையில் பற்றாக்குறையாகவுள்ள 6 இலட்சம் ‘அஸ்ரா செனகா’ கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் டென்மார்க், நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளுடன் கலந்துரையாடி வருகிறது.
கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு இந்தியாவினால் 12 இலட்சம் ‘அஸ்ரா செனாகா’ தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில் அவற்றில் 9 இலட்சம் பேருக்கு முதலாவது டோஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் தீவிரமடைந்துள்ள கொவிட் தொற்றுப் பரலால் அஸ்ரா செனகா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்மதி செய்வதை இந்திய அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டது.
இவ்வாறான நிலைமையில் இலங்கையின் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகளை பயன்படுத்தி மூன்று இலட்சம் பேருக்கு இரண்டாவது டொஸ் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் முதலாவது டோஸாக அஸ்ரா செனகா தடுப்பூசியை போட்டுக்கொண்ட மேலும் 6 இலட்சம் பேருக்கு இரண்டாவது டோஸை வழங்குவதற்கு அதே வகை தடுப்பூசி கையிருப்பில் இல்லாத காரணத்தினால் வேறு நாடுகளில் இருந்து அவற்றை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தோனேசியாவில் மேலதிகமாக ‘அஸ்ரா செனகா’ தடுப்பூசி இருப்பதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அரசாங்கம் அந்த நாட்டுடன் கலந்துரையாடிய போதும், அதனை பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது.
இந்நிலையில் டென்மார்க், நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளிடம் இருந்தாவது அவற்றை பெற்றுக்கொள்ள முடியுமா என்று தற்போது இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.