பிரித்தானியாவில் கடந்த 06 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக போட்டியிட்ட இலங்கையை பூர்வீகமாக கொண்ட இருவர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
அந்தவகையில் ஜெய் கணேஷ் என்பவர் பிரித்தானியாவின் ஷெர்போர்ன் செயின்ட் ஜோன் மற்றும் ரூக்ஸ் டவுன் வட்டார உள்ளூராட்சி மன்ற உறுப்பினராகவும் லூஷியன் பெர்னாண்டோ, கிழக்கு சசெக்ஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினராகவும் தெரிவாகியுள்ளனர்.
கொழும்பினை பிறப்பிடமாகக் கொண்ட லூஷன் பெர்னாண்டோ, 766 வாக்குகளை பெற்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
இவர் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள நிலையில், அந்நாட்டு இராணுவம் மற்றும் மெட்ரோ பொலிஸ் பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.
இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளை பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதன் ஊடாக இலங்கை அரசாங்கத்தோடு பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக லூஷியன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதேபோல் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜெய் கணேஷ், இந்தத் தேர்தலில் 1185 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
லண்டன் Metropolitan பல்கலைக்கழகத்தில் சர்வதேச சுற்றுலா நிர்வாகத்தில் பட்டம் பெற்ற இவர், உள்ளூர் அரசாங்கத்தில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.
இவர் தனது ஆரம்ப கல்வியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியிலும், உயர் கல்வியை கொழும்பு இந்துக் கல்லூரியிலும் பயின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
”எனக்கு வாக்களித்த உங்கள் நலனை கருத்தில் கொண்டு உங்கள் நலனில் அக்கறையுடன் செயற்படுவேனென்று உறுதியளிப்பதுடன், பேசிங்ஸ்டோக் மற்றும் டீன் பரோ நகர சபையின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பேன் ” என ஜெய் கணேஷ் தெரிவித்துள்ளார்.