வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு நபரும் வீட்டிற்கு வந்த பிறகும் முகக் கவசங்களை அணிய வேண்டும் என லியனகொட பொது சுகாதார பரிசோதகர் கீர்த்தி லால் துடுவகே தெரிவித்தார்.
தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தல்களை வழங்குபோதே, அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டில் அரசாங்கமும் சுகாதாரத் துறையும் இணைந்து கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான 90% நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது நாட்டு மக்களின் நடத்தையில் உள்ளது எனவும் மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“வேலைக்காக வெளியில் செல்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கும் தொற்று பரவல் அடையாளம். இதனை தவிர்ப்பதற்காக முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்.”
இதனிடையே, நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளில் சில தவறான முடிவுகளைக் காண்பிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கூறினார்.
பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் சோதனை அறிக்கைகளில் இவ்வாறு குறைபாடுகள் உள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, கொரோனா தொற்று பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு மக்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் பொது மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.
எனினும், குடும்ப உறுப்பினர்களுடன் சொந்த வாகனங்களில் பயணிப்பவர்கள் முகக் கவசம் அணியத் தேவையில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.