இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவைக்குத் தேவையான சாட்சியங்களை கடந்த முறையைப் போன்றே, இம்முறையும் இரகசியமான முறையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாட்சியங்களை சமர்ப்பிக்கும் விடயத்தில் பகிரங்கமாக செயலாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் கடந்த முறை சாட்சியங்களை இரகசியமாக சமர்ப்பித்த காரணத்தினால் தாம் ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாகவும் சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஐநா தீர்மான அமுலாக்கம் மிக துரிதமாக நடப்பதாகவே அறிகின்றேன். சாட்சியங்களை கண்டறியும் செயற்குழுவுக்கு உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு தேவையான நிதி செப்டம்பர் மாதத்தில் ஐநா பொதுச் சபையில் அனுமதி வழங்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
வெகு விரைவில் இது தொடர்பான முன்னெற்ற அறிக்கை வரும் போது, எந்தளவுக்கு அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை அறியக் கூடியதாக இருக்கும்.
அதற்கு மேலதிகமாக தற்போது நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான மேற்பார்வைகளும் தொடர்ச்சியாக இருக்கின்றன.
ஐநா மனித உரிமைகள் உயரிஸ்தானிகள் அலுவலகம் இதனை செய்து வருகின்றதாகவே தெரிகின்றது.” என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், குருந்தூர்மலை தொடர்பில் அடுத்தடுத்த வாரங்களில் உயர் நீதிமன்றத்தில் சமய வழிபாடுகளுக்கு தடை விதிப்பதுடன், இந்துக்களின் பாரம்பரிய வழிபாட்டு தலத்தை மாற்ற நடவடிக்கையெடுக்கின்றனர் எனக் கூறி வழக்கொன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.