எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்கள் இடையே அறிகுறிகள் அற்றவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
அத்தோடு இவ்வாறு வீட்டில் இருப்பவர்கள் விசேட சுகாதார குழுவினரால் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதுடன் அவர்களுக்கு வைத்தியசாலை சிகிச்சை தேவைப்படுமாயின் மட்டும் அவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் வைத்திய சாலைகளில் நிலவும் நெருக்கடிகளை குறைப்பதற்காக அரசங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இலங்கையில் இறுதியாக வெளியான தரவுகளின் படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 138,085 ஆக பதிவாகியுள்ளது.
அத்தோடு கொரோனா தொற்றுக்குள்ளான 20,865 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் கடந்த 5 நாட்களில் 120 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியதையடுத்து கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது.
இதனிடையே இலங்கையின் கொவிட்-19 மரணங்களின் சதவீதம், 0.67 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.