
கொரோனா தொற்று அச்சத்திற்கு மத்தியில் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் நிலவும் நெருக்கடி நிலைமையை கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியற்றுவோரிடையே கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
கடந்த ஒருவார காலப்பகுதியில் 96 தனிமைப்படுத்தல் நிலையங்களில் சுமார் 10,500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதால் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஏற்பாடாக யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கொட்டகலை ஆகிய இடங்களிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றும் நடவடிக்கைகள் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இங்கு தனிமைப்படுத்தும் நிலையங்களில் நெருக்கடி நிலைமை குறைவடையும் வரையில் வெளிநாடுகளில் இருப்பவர்களை அழைத்து வராமல் இருப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.