May 29, 2025 11:15:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நினைவுத் தூபிகளை இடித்தழிப்பது மிக மோசமான செயல்; சம்பந்தன் தெரிவிப்பு

“இறுதிப் போரில் மரணித்த எமது உறவுகளை நினைவுகூர்ந்து அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை சேதமாக்கியமை மிக மோசமான செயலாகும். இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த விவகாரம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இறுதிப் போரில் கொன்றழிக்கப்பட்ட எம் உறவுகளை நிம்மதியாக உறங்க விடுங்கள் என்று அரசிடம் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமெனில் ஒவ்வொரு இனத்தவர்களும் போரில் இறந்த தமது உறவுகளை நினைவேந்த அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழ் மக்களுக்கு இந்த அனுமதியை தற்போதைய அரசு வழங்க மறுக்கின்றது. அத்துடன், இறந்த தமிழர்களை நினைவுகூர்ந்து வடக்கு, கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் தூபிகளையும் இடித்தழிப்பதில் இந்த அரசு குறியாக இருக்கின்றது.

இது நாட்டின் முன்னேற்றத்துக்கு நல்ல செயல் அல்ல. அரசின் பயணத்துக்கு ஆரோக்கியமான செயல் அல்ல. இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு உகந்த செயல் அல்ல. இது மிக மோசமான செயலாகும். எனவே, இந்த செயலை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.