July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அபிவிருத்தி திட்டங்களை தவறாக திசை திருப்பும் மலிவான அரசியலை சிறீதரன் எம்.பி. நிறுத்த வேண்டும்’; அமைச்சர் டக்ளஸ்

மக்களுக்கு பயன் தரக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களை தவறாக திசை திருப்புகின்ற மலிவான அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

”கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுயநலன்களுக்காக கிளிநொச்சி வலைப்பாட்டு பிரதேசத்தினை சேர்ந்த கடலட்டை பண்ணையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாக’ நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் பேசுகையில்;

அரசியல் ஆதாயத்திற்காக, மக்களை தவறாக வழிநடத்தும் செயற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கருத்து தெரிவித்துள்ளார்.கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை அதிகரிக்கும் வகையில் கடற்றொழில் சார் பண்ணைகளை உருவாக்குவது தொடர்பாக விரைவான வேலைத் திட்டங்கள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

இந் நிலையில், கடலட்டை பண்ணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருப்பது வியப்பை ஏற்படுத்துவதாகவும் அவ்வாறான கீழ்த்தரமான அரசியல்வாதியாக நான் என்றைக்குமே செயற்பட்டதில்லை என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் வலைப்பாடு கடற்றொழிலாளர் சங்கத்தின் ஆதரவுடன் குறித்த பண்ணையாளர்கள் தமது பண்ணை அமைந்திருந்த கடல் பிரதேசத்தில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் கரையை அண்டிய கடல் பிரதேசத்தில் கடலட்டை பண்ணையை இடம் மாற்றியுள்ளனர்.

இந்த இடமாற்றத்திற்கு தேவையான அனுமதிகள் எவையும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படவில்லை என்பதுடன், சுமார் 30 வருடங்கள் பட்டி வலைத் தொழிலில் ஈடுபட்டு வந்த கிராஞ்சி கடற்றொழிலாளர் சங்கத்தினை சேர்ந்த ஒருவரின் வலைகளை எதேச்சதிகாரத்துடன் அறுத்து எடுத்துச் சென்றுள்ளதுடன், அந்த இடத்தில் குறித்த கடலட்டை பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத செயற்பாட்டினால், கிராஞ்சி மற்றும் வலைப்பாடு கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் குறித்த விடயம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து இரண்டு தரப்புகளுக்கும் இடையில் சமரசத்தினை ஏற்படுத்தியதோடு, சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட கடலட்டைப் பண்ணைகளை அகற்றுமாறு அறிவுறுத்தியதுடன், குறித்த கடலட்டை பண்ணை அமைத்திருந்தவர்களுக்கு பொருத்தமான இடத்தினை தெரிவு செய்து வழங்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, வலைகளை அறுத்தவர்களிடம் இருந்து தொழில் பாதிப்பிற்கு நஷ்ட ஈடு பெற்றுத் தரவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், ஏற்பட்ட நஷ்டத்திற்கான பரிகாரத்தினை கடற்றொழில் அமைச்சினால் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.