October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொவிட் பேரழிவிலிருந்து அனைவரும் பாதுகாப்பு பெற பிரார்த்திப்போம்’: ஜனாதிபதி, பிரதமர் நோன்புப் பெருநாள் வாழ்த்து

முஸ்லிம்கள் அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

உலகம் எதிர்கொண்டுள்ள கொவிட் பேரழிவிலிருந்து உலக மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இஸ்லாமியர்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து, கொண்டாடும் ஈதுல் பித்ர் நன்னாளில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் அனைத்து நல்லெண்ணங்களும் ஈடேற வேண்டும் என்று ஜனாதிபதி வாழ்த்தியுள்ளார்.

“சமூகங்களுக்கு இடையில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பி, உலகுக்கு நாம் எடுத்துக் காட்டிய நல்லிணக்கம் முழு இஸ்லாமிய உலகிற்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாகும்.

புனித அல் குர்ஆனின் போதனைகளை பின்பற்றும் உண்மையான முஸ்லிம்கள் இந்த கூட்டு அர்ப்பணிப்பையும் திட உறுதியையும் மேலும் பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றும் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து, உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் பித்ர் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

புனித அல்குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வகையில் அனுட்டிக்கப்படும் ஒரு மாத கால ரமழான் நோன்பின் மூலம், மத ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உலகிற்கு மிக முக்கியமான செய்தி வெளிப்படுத்தப்படுவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நோன்பு காலத்தில் பிறரது பசி பற்றிய சரியான புரிந்துணர்வுடன், விட்டு கொடுப்பு மிகுந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப இஸ்லாமியர்கள் எவ்வித உயர்வு தாழ்வுமின்றி ஒன்றிணைவார்கள் என்று தான் நம்புவதாகவும் மகிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

“மத ரீதியான முறையான போதனைகளை கற்ற ஒழுக்கம் மிகுந்த இஸ்லாமியர்கள் வரலாறு முழுவதும் இலங்கை சமூகத்தில் பிற இனங்கள் மற்றும் மதங்களுடன் ஒருவருக்கொருவர் மிகுந்த நட்புடன் செயற்பட்டுள்ளனர்.

இந்த நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல் முன்னோக்கி செல்ல முஸ்லிம் மக்களுக்கு உள்ள அவசியத்தை ஒரு அரசாங்கமாக நாம் புரிந்துகொண்டுள்ளோம்.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் பண்டிகையை சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி நிறைவேற்றுவார்கள்” என்பதை தாம் நம்புவதாகவும் பிரதமரின் வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.