இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு சீனாவின் ‘சினோபார்ம்’ தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இதுவரை 30 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு ‘சினோபார்ம்’ தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு கொவிட் தடுப்பு பணிக்குழு முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
எவ்வித ஒவ்வாமையும் இல்லாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
சீனா இலங்கைக்கு நன்கொடையாக ‘சினோபார்ம்’ தடுப்பூசியின் 600000 டோஸ்களை வழங்கியது.
இந்நிலையில் எதிர்காலத்தில் மேலும் “சினோபார்ம்” தடுப்பூசிகள் நாட்டுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
“எல்லோரும் தமது வாழ்க்கையை நேசிக்கிறார்கள்.எனவே சரியான தடுப்பூசி பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்.
இதனிடையே இலங்கையில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசிக்காக காத்திருக்கும் 600,000 பேருக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்க பல நாடுகள் முன்வந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
3 மில்லியன் வரையான “சினோபார்ம்” தடுப்பூசியை பெற்று கொள்வதற்காக சீன அதிகாரிகளுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கம் கண்டுள்ளது.