Photo: Facebook/Kumanan Kana
முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னங்கள் சேதமாக்கப்பட்டமை நாகரிகமற்ற செயல் எனத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துணைத் தலைவருமான மாவை சோனாாதிராஜா, இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் வகையில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னம் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மாவை சேனாதிராஜா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நிலைநட்டுள்ள சின்னங்கள் சிதைக்கப்பட்டுள்ளமையும், நிலைநாட்டவெனவிருந்த நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டமையும் எம் நெஞ்சை உலுக்கும், கொந்தளிக்கச் செய்யும் செயற்பாடாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இரவு முள்ளிவாய்க்கால் முற்றத்தைச் சுற்றி இராணுவம் குவிக்கப்பட்ட நிலையில் இக்கொடிய நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நாகரிகமற்ற செயலை அனைவரும் கண்டித்தே ஆகவேண்டும். இதற்கான பொறுப்பை அரசு ஏற்றுப் பதிலளிக்க வேண்டும் என்றும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
இதேவேளை அரசும், இராணுவத்தினரும் முல்லைத்தீவில் குருந்தூர் மலைப்பிரதேசத்தில் சைவ மக்கள் வழிபாட்டுத்தலத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளையும் மீறி ஒன்று கூடி பௌத்த சிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளிலும், வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், போரில் மரணித்த உறவுகளை நினைவு கூரும் உரிமை மறுக்கப்படுவது மட்டுமல்ல அந்த நினைவுகூரும் மையங்கள் நினைவிடங்களும் அழிக்கப்படுகின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.