July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

களுத்துறை, காலி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு , வௌ்ள அபாய எச்சரிக்கை!

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக களுத்துறை மாவட்டத்தின் 7 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு மற்றும் வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  புலத்சிங்கள, பாலிந்தநுவர, அகலவத்தை, வலல்லாவிட்ட, இங்கிரிய, மத்துகம மற்றும் தொடங்கொடை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணிவரையில் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ஹொரன, களுத்துறை, பேருவளை, மில்லனிய, மதுரவல, பாணந்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நியகம, எல்பிட்டிய, நாகொட, நெலுவ, பத்தேகம மற்றும் தவலம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேச செயலாளர் பிரிவுகளை அண்மித்து காணப்படும் பகுதிகளில் வாழும் மக்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலத்தில் வெடிப்பு ஏற்படுதல், நிலம் தாழிறங்கல் மற்றும் திடீரென ஊற்று உருவாதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அதிக  கவனம் செலுத்துமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, இலங்கையில் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை காலை 10 மணியுடன் நிறைவடைய 24 மணித்தியாலத்திற்குள் நாட்டின் 10 மாவட்டங்களில் அடை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் நாட்டின் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் மழை அதிகரிக்கும் சப்ரகமுவ, மத்திய, மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, களு கங்கை, நில்வளா கங்கை மற்றும் ஜின் கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால், தாழ்நில பகுதிகளில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.