November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்கள் கொல்லப்படுவதற்கு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

இலங்கையில் பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்கள் கொல்லப்படுவதற்கு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த ‘ஊரு ஜூவா’ எனும் மெலோன் மாபுல மற்றும் ‘கொஸ்கொட தாரக’ எனும் தாரக பெரேரா ஆகியோர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பொலிஸாரின் கடமை என்பதையும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவர்களின் மரணங்கள் நீதித்துறைக்குப் புறம்பான கொலைகளின் அடையாளங்களைக் கொண்டிருப்பதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளதோடு, தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தமது சேவை பெறுநருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கொல்லப்பட்டவர்களின் சட்டத்தரணிகள், சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருந்த நிலையில், இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாமல் போனது பொலிஸ்மா அதிபர் உட்பட பொலிஸாரின் தோல்வி என்றும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.