photo: Facebook/Kumanan Kana
நினைவுச் சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக தமிழருடைய உணர்வுகளை அழித்து விட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த நினைவு முற்றம் இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கமானது தொடர்ந்து தமிழர்களுடைய வரலாறுகளை நினைவு கூறும் வாய்ப்பினை கூட இல்லாமலாக்கும் வகையிலேயே செயற்படுகின்றது என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் இவ்வாறான சம்பவம் நடைபெற்றது. ஆனால் அதை அந்த பல்கலைக்கழக உபவேந்தரே மீண்டும் கட்டி முடித்திருக்கின்றார் என சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையிலேயே தமிழர்களுடைய உணர்வுகளை இவ்வாறான நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் மூலம் அழித்துவிட முடியாது. நீங்கள் இடிக்கும் ஒவ்வொரு நினைவுச் சின்னமும் தமிழர்களுடைய மனங்களில் ஒரு புதிய உணர்வை ஏற்படுத்தும் ஒரு சம்பவமாகத்தான் இருக்கும் என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற சம்பவங்களை மிக வன்மையாக கண்டிப்பதுடன், அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற தமிழ் பிரதிநிதிகளும் இதுதொடர்பாக உங்களுடைய கண்டனத்தினை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.