October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா: நான்கு நாட்களில் 10 ஆயிரம் பேருக்கு தொற்று ; 161 பேர் பலி

இலங்கையில் மே முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 22 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன், 161 பேர் உயிரிழந்துள்ளனர்.

இக்காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 173 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 90 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 293 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மே 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான நான்கு நாட்களில் 10, 148 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 9 ஆம் திகதி முதல் தடவையாக இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை  கடந்தது. அதன்பிறகு 10ஆம் திகதி 2,573 தொற்றாளர்களும், 11 ஆம் திகதி 2,530 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டனர்.

இலங்கையில் நேற்றைய தினம் (புதன்கிழமை)இரண்டாயிரத்து 429 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில், 43 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் மாத்திரம் ஆயிரத்து 115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 413 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 332 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 370 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் குருநாகல் மாவட்டத்தில் 136 பேரும், காலி மாவட்டத்தில் 128 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 140 பேரும், பதுளை மாவட்டத்தில் 111 பேரும், கண்டி மாவட்டத்தில் 123 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 107 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 119 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 41 பேரும், வவுனியா மாவட்டத்தில் 8 பேரும், முல்லைத்தீவில் ஒருவரும், யாழ்ப்பாணத்தில் 34 பேரும், கிளிநொச்சியில் 8 பேரும், நுவரெலியாவில் 29 பேரும், மட்டக்களப்பில் 15 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்றைய தினம் மேலும் 18 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 868ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32, 527 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 1,07, 657 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 24002 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.