November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க 17,500 கோடி ரூபாவை ஒதுக்கிய மத்திய வங்கி!

இலங்கை கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான கடன் திட்டத்தின் கீழ் 17 ஆயிரத்து 500 கோடி ரூபா நிதியை மத்திய வங்கி ஒதுக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதன் பின்னர் கடந்த ஆறு மாதங்களாக நடுத்தர தொழிலாளர்கள், விவசாயிகள் என பலர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதனால், நாட்டின் பொருளாதாரத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வங்கி கருத்து தெரிவித்துள்ளது.

இதன்படி மீண்டும் சௌபாக்கியமான நாட்டைக் கட்டியெழுப்பும் கடன் திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் கோடி ரூபா நிதியை மத்திய வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது.

தற்போது பிரதமரின் கோரிக்கைக்கு அமைய இந்த தொகையை மேலும் இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாவால் அதிகரிக்க அது தீர்மானித்துள்ளது.

இது குறித்து நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவிடம் கேள்வியெழுப்பிய போது அதற்குப் பதிலளித்த அவர்;

“நாட்டின் பொருளாதார நிலைமைகள் ஆரோக்கியமான நிலையில் இல்லை. ஆறு மாதகாலமாக உள்நாட்டு வியாபாரம், உற்பத்திகள் என எவற்றிலும் பயனளிக்கத்தக்க முன்னேற்றங்கள் காணப்படவில்லை.

கொரோனா வைரஸ் பரவல் நிலவும் காரணத்தினால் நாட்டை முடக்கி வைத்துக் கொண்டிருக்கவும் முடியாது.

எனவே விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபரிகள், உற்பத்தியாளர்கள் என சகலருக்கும் பொருத்தமான வகையில் இலகு கடன்கள் மூலமாக அவர்கள் வியாபார செயற்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது” என்றார்.