மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்று சுகாதார சேவைக்கு ஒரே நேரத்தில் பணியாளர்களை அதிகரிப்பு எளிதானது அல்ல என கொவிட் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
ஏனெனில் சுகாதார சேவைகள், ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்று நோய்கள் மற்றும் கொரோனா நெருக்கடி ஆகியவற்றில் பணியாற்றுவதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கு அதிகமான காலம் தேவை என அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர், இதனைத் தெரிவித்தார்.
கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை சுகாதார துறையினரால் சிகிச்சை அளிக்கக் கூடிய அளவை விடவும் அதிகமானால் நாடு ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
எனினும் நாட்டில் தற்போது வரை சுகாதார துறையினால் கட்டுப்படுத்தக்கூடிய மட்டத்தில் கொரோனா தொற்று உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மருத்துவமனைகளில் தற்போது, சுமார் 600 முதல் 700 அவசர சிகிச்சை படுக்கைகள் இருந்த போதிலும் அவற்றில் பெரும்பாலானவை பிற முக்கியமான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கவென 190 படுக்கைகள் மட்டுமே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, தடுப்பூசி திட்டம் விரைவு படுத்தப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்வதற்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகலாம். அத்தோடு தடுப்பூசிகள் உயிர் இழப்பைக் குறைக்க மட்டுமே உதவுகின்றன என்றார்.
எனவே இவ்வாறான ஒரு சூழலில் நாட்டு மக்கள் அனைவரும் வைரஸ் பரவுவதை தடுக்க அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.