July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அடுத்த இரு வாரங்களுக்குள் 6 இலட்சம் டோஸ் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசிகள் கிடைக்கும்’; இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொவிட் தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கும் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

தற்போதயை கொவிட்-19 நிலைமை தொடர்பில் இன்று (புதன்கிழமை) முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை  குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட வேண்டும்.

அதேபோல, களஞ்சியத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட பின்னர் 2 மணித்தியாலங்களுக்குள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதியாக 15,000 டோஸ்கள் கடந்த மூன்றாம் திகதி இலங்கையை வந்தடைந்தது.

இந்த நிலையில், 15 ஆயிரம் டோஸ்களில் 11,334 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், குறித்த அறிக்கைகள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் என்றும் கூறினார்.

இதனையடுத்து இரண்டு வாரங்களில் மேலும் 6 இலட்சம் டோஸ்கள் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.