January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்துக்கு கொரோனா தொற்று உறுதி!

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்  கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கொழும்பு, டெய்லி மிரர் செய்தி சேவைக்கு இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

திருகோணமலை அரச அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்புக்கு பிறகு, இரண்டு நாட்களுக்கு முன்னர் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்பட்டதாகவும், இதன் முடிவுகள் நேற்று (11) கிடைக்கப்பெற்றதையடுத்து தொற்று உறுதியானதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய தனது இல்லத்திலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இதேவேளை, கடந்த சில தினங்களாக அவருடன் நெருக்கமான தொடர்பை பேணியவர்கள் மற்றும் பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

“கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தாம் துரதிர்ஷ்டவசமாக, கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அவர் டெய்லி மிரர் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு கிழக்கு மாகாணத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் உடனடியாக அமுலாகும் வகையில் கிழக்கு மாகாணத்தின் மாவட்டங்களுக்கு இடையே பயண கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.