January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணக் கட்டுப்பாடு: வீடுகளில் இருந்து வெளியில் செல்ல அடையாள அட்டை இறுதி இலக்க முறைமை அமுல்!

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத பகுதிகளில் வசிப்பவர்கள் தமது ​தேசிய அடையாள அட்டையின் கடைசி எண்ணின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அத்தோடு, நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரையில் நாடு தழுவிய முழு நேர பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் உள்ளவர்கள் தமது தேசிய அடையாள அட்டையின் கடைசி எண்ணின் அடிப்படையில் பொது இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதுடன், இந்த நடைமுறை நாளை (வியாழக்கிழமை) முதல் மே 31 வரை நடைமுறையில் இருக்கும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

இதன்படி, தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 0, 2, 4, 6, 8 ஆகிய இரட்டை எண்களைக் கொண்டவர்கள் 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 ஆகிய தினங்களில் பயணக் கட்டுப்பாடு இல்லாத சந்தர்ப்பத்தில் மட்டும் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

அதேபோன்று, தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 1, 3, 5, 7, 9 ஆகிய ஒற்றை எண்களைக் கொண்டவர்கள் 13, 17, 19, 21, 23, 25, 27, 29, 31 ஆகிய தினங்களில் பயணக் கட்டுப்பாடு இல்லாத சந்தர்ப்பத்தில் மட்டும் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியேறும் எல்லா சந்தர்ப்பங்களிலும் தமது தேசிய அடையாள அட்டையை உடன் வைத்திருக்க வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண வலியுறுத்தினார்.

தேசிய அடையாள அட்டை இல்லாத சந்தர்ப்பத்தில் மட்டுமே, அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏனைய ஆவணங்களை எடுத்தச் செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

எனினும், இந்த அடையாள அட்டை முறைமையிலிருந்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமைகளுக்காகச் செல்பவர்களுக்கு விலக்களிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் வீட்டைவிட்டு வெளியேறுபவர்கள் கண்டிப்பாக இதனைக் கருத்தில்கொண்டு செயற்படுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.