November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்’; பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் அடுத்துவரும் இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பிசிஆர் சோதனையின் போது மிக அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வரலாம் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், மேலும் கடுமையாக கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா வைரஸின் மூன்றாவது அலை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது எனவும், கண்டறியப்படாத நிலையில் சமூகத்தில் அதிக எண்ணிக்கையிலான நோய் தொற்றுடையவர்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய கருத்து தெரிவிக்கையில்,

அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளாந்தம் பெருமளவானவர்கள் பாதிக்கப்படுகின்றனர் .

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களையும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களையும் இதுவரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என தெரிவித்துள்ள பாலசூரிய, அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொழும்பு உட்பட மேற்கு மாகாணம் இன்னும் அதிக ஆபத்துள்ள பகுதி என்றும் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களை  கண்டறிய கூடுதல் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இதேவேளை, நாட்டில் மூன்றாவது அலை இருக்காது என்று கூறி சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தியதாகவும் தற்போது கொழும்பின் நிலைமை அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள அதிகாரிகள் மேலும் இறுக்கமான நடைமுறைகளை அறிவிக்காதது குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள அவர், மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மாத்திரம் போதுமானவையல்ல எனவும் தெரிவித்துள்ளார்.