
நாட்டில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், புகைபிடிக்காதபடி மக்களை ஊக்குவிப்பதற்கும், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதற்கும் முன்வருமாறு ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்திய நிபுணர் ஷெனால் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதனால், அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கும், புகைபிடிப்பதை தடுப்பதற்கு அதனுடன் தொடர்புடைய அனைத்து கடைகளையும் உடனடியாக மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.மேலும் இது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என்று அவர் கூறினார்.
மக்கள் மதுபானங்களை வாங்குவதற்கும், புகைபிடிப்பதற்கும் அல்லது அவற்றை உட்கொள்வதற்கும் பல இடங்களில் ஒன்று கூடுவார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வீடுகளில் நடைபெறுகின்ற விருந்துபசார நிகழ்வுகளில் கலந்துகொண்டு அங்கே ஒன்றுகூடுவார்கள். தற்போது கொரோனா வைரஸுக்கு எதிராக நாடு போராடி வரும் சூழ்நிலையில், அந்தப் பழக்கங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எது எவ்வாறாயினும், முன்னதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மாலை 6 மணியுடன் மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.