யுத்தத்தில் இறந்த மக்களை நினைவு கூரும் வகையில் மே 18 ஆம் திகதியை செப நாளாக கடைபிடிக்குமாறு வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் தமிழ் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
‘யுத்தத்தில் கொல்லப்பட்டோரை நினைவுகூரும் தினம்’ என்ற தலைப்பில் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
மே 18 ஆம் திகதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் நாளாக இருக்கின்றது. கொல்லப்பட்டவர்களுக்காக நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு-கிழக்கு ஆயர்களாகிய நாம் அந்த தினத்தை செப நாளாகவும் அனுசரிக்கும் படி வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்களை கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி மே 18 ஆம் திகதி மாலை 6 மணிக்கு சகல தேவாலயங்களிலும் மூவேளை செப மணியோசை எழுப்புதல், மக்களை செபிக்க அழைத்தல், ஈகைச் சுடர் ஏற்றுதல்,இரண்டு நிமிட அக வணக்கம் , இறந்தோர், பாதிக்கப்பட்டோர், துன்புறுவோரை நினைத்து மௌன செபம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை சுகாதார ஒழுங்குவிதிகளை கடைபிடித்து மக்கள் தங்கள் இல்லங்களில் இருந்தவாறு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செய்யவும், செபிக்கவும் ,அறிவுறுத்துமாறு சகல பங்குத் தந்தையர்கள் மற்றும் துறவரக் குழுமங்கள் மற்றும் மத நிறுவனங்களை கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல், யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆகியோர் அந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.