இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை இன்று முதல் சகல பிரதேசங்களிலும் சுகாதார மற்றும் தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள் கடுமையாக செயற்படுத்தப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்படி சகல பிரதேசங்களிலும் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்று பொலிஸ் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாகாண எல்லைகளிலும் கடுமையாக இந்த சட்டம் செயற்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை காண்பித்து மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியுமென்ற போதும் வேறு நபர்களுக்கு அத்தியாவசிய தேவையின்றி மாகாண எல்லைகளை தாண்ட முடியாது.
கூட்டம், கருத்தரங்கு, கண்காட்சி, சமய நிகழ்வுகள், விருந்துபச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாக அந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களும், அனுமதி வழங்கியவர்களும் கைது செய்யப்படுவார்கள்.
அத்துடன் தொழில் நிலையங்களில் சுகாதார வழிகாட்டல்கள் உரிய வகையில் பின்பற்றப்படவேண்டும் அதனை மீறும் நிறுவனங்கள் மூடப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று பஸ்களில் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்ல முடியாது. ஆட்டோக்களில் சாரதி தவிர்ந்த இரண்டு பயணிகளுக்கு மட்டுமே பயணிக்க முடியும். இந்த சட்டத்தை மீறும் சாரதிகள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீதிகளிலும், பொது இடங்களிலும் மற்றும் வீடுகளுக்கு வெளியிலும் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் மூக்கு வாயை மறைக்கும் வகையில் முறையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.