யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பழக்கடைகளை அகற்றுமாறு யாழ்ப்பாண மாநகரசபை அறிவித்துள்ளதுடன் அதற்கான காலக்கெடு விதித்துள்ளமையைக் கண்டித்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமது வாழ்வாதார கடைகளை மாநகர முதல்வர் தன்னிச்சையான முறையில் அகற்ற முற்படுவதாகத் தெரிவித்து, யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பு இன்று திங்கட்கிழமை காலை இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்த ஆர்ப்பாட்டக்கார்கள், தமக்கான தீர்வை வழங்குவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக குறித்த பகுதியில் தாங்கள் வாடகை செலுத்தியே தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கண்டன போராட்டத்தின் நிறைவில் ஆளுநர் அலுவலகத்தில் தமக்கான தீர்வை வலியுறுத்திய மகஜர் ஒன்றை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கையளித்துள்ளனர்.