October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தடுப்பூசி கொள்வனவுக்காக 136 கோடி ரூபாவை இலங்கை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது’

இலங்கையில் பரவி வரும் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப் படுத்தும் விதமாக சீன,ரஷ்ய,அமெரிக்க தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக 136 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும் பட்சத்தில் மேலதிகமாக நிதி ஒதுக்க முடியும் எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

சீன தடுப்பூசிகளை கட்டம் கட்டமாக கொண்டுவரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டத்தில் சீனா வழங்கியுள்ள 15 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் பொது மக்களுக்கு ஏற்றும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இன்னும் இருவார காலத்தில் மேலும் 65 ஆயிரம் தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள அரசாங்கம் உடன்படிக்கை செய்துள்ளது.

இந்நிலையில் ஜூலை மாதம் முதலாம் வாரத்தில் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் ஜூலை மாதத்தில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும், இவ்வாறு தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவே தற்போது அரசாங்கம் 136 கோடி ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.