July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் 2,530 பேருக்கு கொரோனா தொற்று ; கடந்த 10 நாட்களில் 149 பேர் இறப்பு

இலங்கையில் செவ்வாய்க்கிழமை 2,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 23 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 131,060 ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் மே மாதத்தின் கடந்த 10 நாட்களில், 20,384 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேநேரம், 149 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன.

அறிக்கைகளின் படி நாட்டில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 25% முதல் 28% வரையானவர்கள் அறிகுறியை வெளிப்படுத்திய நோயாளிகள் என்றும் அவர்களில் 17% வீதமானோருக்கு ஒக்ஸிஜன் தேவைப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு ஒக்ஸிஜன் தேவைப்படுபவர்களில் சுமார் 4% முதல் 5%  வரையானவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனிடையே ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 20 கர்ப்பிணித் தாய்மார்களும் 15 வயதுக்கு கீழ் பட்ட 25 இளம் சிறுவர்களும் சிகிச்சை பெற்று வருவதாக ஹோமாகம வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை,  கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 1,030 பேர் பூரணமாக குணமடைந்ததையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 105,611 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது.