July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை தொடர்பான கணிப்புகளை தெளிவுபடுத்துமாறு வாஷிங்டன் பல்கலைக்கழகத்திற்கு அரச மருத்துவர் சங்கம் கடிதம்

இலங்கையில் செப்டம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் சுமார் 20,876 பேர் வரை உயிரிழக்க நேரிடும் என அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலை தெளிவுபடுத்தக்கோரி அரச மருத்துவர் சங்கம் குறித்த நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் எந்த தரவுகளின் அடிப்படையில் இந்த கணிப்பீட்டை வெளியிட்டுள்ளது என்ற கேள்வியை அரச மருத்துவர் சங்கம் இந்த கடிதத்தின் ஊடாக எழுப்பியுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில  தெரிவித்தார்.

ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறினால் தற்போதைய கணிப்புகளின் படி, செப்டம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் சுமார் 20,876 பேர் வரை உயிரிழக்க நேரிடும் எனவும் ஜூன் மாதம் அளவில் தினசரி இறப்பு எண்ணிக்கை 264 ஆக பதிவாகும் எனவும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.எனினும் இந்த கணிப்புகள் குறித்து நிபுணர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

நாட்டில் முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மட்டுமே இதுபோன்ற நிலை ஏற்படும் என சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பதில் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதலாவது கொரோனா அலையின் போது இவ்வாறு கணிப்புகள் வெளியிடப்பட்ட போதிலும் சுகாதார பிரிவினரால் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த நிலைமை கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற தவறியதால் கடந்த சில நாட்களில் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அத்தோடு நாடு அவ்வாறான ஒரு ஆபத்தான கட்டத்தை அடையாதிருக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பதில் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இதனிடையே, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுவரும் கணிப்புகள் “பெரும்பாலான நேரம்” துல்லியமானது என ஒப்புக் கொள்வதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரணு விஞ்ஞான பீடத்தின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

எனினும் இந்த கடுமையான விளைவுகளைத் தடுக்க பொது மக்கள் சுகாதார தரப்பினருக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நாடு தொடர்ந்தும் 2,000 க்கும் அதிகமான தினசரி தொற்று எண்ணிக்கையை பதிவு செய்தால், இது போன்ற ஒரு சூழ்நிலைக்கு வரும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.