November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாணங்களுக்கு இடையே அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோருக்கென விசேட பஸ் சேவைகள்

இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் எதிர் வரும் 30 ஆம் திகதி வரை முற்றாக இடைநிறுத்தப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

எனினும், அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையே பிரவேசிப்பவர்களுக்கு விசேட அரச பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக்கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் இது தொடர்பில் விளக்கம் அளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை  தெரிவித்தார்.

இதனிடையே அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையே சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்களில் வேறு நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு மாகாணங்களுக்கு இடையேயான அனைத்து ரயில் சேவைகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவுடன் இடைநிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் மாகாணங்களுக்கு உள்ளே 62 ரயில் சேவைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

அதன்படி, பிரதானமாக ரயில் சேவைகள் 20 ம், கரையோர ரயில் சேவைகள் 25 ம், புத்தளம் ரயில் பாதைகளில் 8 ரயில் சேவைகளும், களனிவெளி ரயில் பாதை 9 ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, அஞ்சல் ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,நெடுந்தூர ரயில் பயணங்களுக்காக முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களின் பணத்தை மீளப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துணை பொது மேலாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.