இலங்கையில் மாகாணங்களுக்கு இடையே இன்று நள்ளிரவு முதல் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ள நிலையில், மாகாண எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கையெடுத்துள்ளனர்.
மாகாண எல்லைகளின் ஊடான அனைத்து வீதிகளிலும் வீதித் தடைகளை அமைத்து பொலிஸாரும், இராணுவத்தினரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவர் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புடையவர்கள், அரச மற்றும் தனியார் அலுவலகங்களின் ஊழியர்கள் தமது சேவை அடையாள அட்டையை காண்பித்து மாகாண எல்லைகளின் ஊடாக பயணிக்க முடியுமென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தனிப்பட்ட தேவைகளுக்காக செல்வோர், உறவினர் வீடுகள், சுற்றுப் பயணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வோருக்கு மாகாண எல்லைகளை தாண்ட அனுமதி வழங்கப்படாது என்று பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் குறுக்கு வழிகளின் மூலம் மாகாண எல்லைகளை கடந்து செல்வோர் மற்றும் சட்ட விரோதமான முறையில் மாகாண எல்லைகளுக்குள் நுழைவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.