இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் இரத்து செய்யப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்தோடு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொலிஸ் அதிகாரிகள், தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்படும் வரையில் கடமைக்கு சமுகமளிக்க தேவையில்லை எனவும் அவர் கூறினார்.
இன்று (11) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ள நிலையில் இது குறித்த விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகள் பிரிவின் கீழ் இயங்கும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மாகாணங்களுக்கு இடையே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.
இதற்கமைய அத்தியாவசிய சேவை ஊழியர்கள் மாகாண எல்லைகளை கடக்க தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், மாகாண எல்லைகளில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நிறுவனங்களில் 25% க்கும் அதிகமானவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவது கண்டறியப்பட்டால், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நிறுவனத்தின் தலைவர் மற்றும் பணியாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.