இரண்டு வகையான கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து அச்சமடைய வேண்டாம் என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பாக துறைசார் விசேட நிபுணர்கள் இறுதி தீர்மானத்தை எடுப்பார்கள் எனவும் அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்;
முதலாவது கட்டத்தில் ஒருவகை தடுப்பூசியையும், இரண்டாம் கட்டத்தில் மற்றுமொரு வகையைச் சேர்ந்த தடுப்பூசியையும் பயன்படுத்த முடியும் என துறைசார் விசேட நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள வைத்தியர்களும் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வார்கள்.
இதனால், முதலாம் கட்டத்தில் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாம் கட்ட தடுப்பூசி தொடர்பில் எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
அத்துடன், முதலாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தாமதம் ஏற்படுவது குறித்து அச்சமடைய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.