முஸ்லிம் மக்கள் இந்த வார இறுதியில் நோன்பு பெருநாளை கொண்டாட உள்ள நிலையில், கொழும்பில் பணிபுரியும் முஸ்லிம்களை தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவுடன் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை அமுலுக்கு வர உள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் இதனைத் தெரிவித்தார்.
அத்தோடு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசின் முடிவையும் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையையும் விரைவு படுத்தும் திட்டத்தையும் வரவேற்பதாக அவர் மேலும் கூறினார்.
அத்தோடு, நோன்பு பெருநாளை கொண்டாடுவதற்காக தமது சொந்த இடங்களுக்கு திரும்ப விரும்பும் முஸ்லிம்களை அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, நோன்பு பெருநாள் தினத்தில் பள்ளிகளை மூடும் அரசாங்கத்தின் முடிவையும் தாம் வரவேற்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
அரசு கொரோனா தடுப்பூசிகளின் கொள்வனவு மற்றும் விலைப்பட்டியல் குறித்த விபரங்களை வெளியிட வேண்டும் என கூறிய அவர், இதன் ஊடாக மக்கள் தடுப்பூசிகளுக்கான செலவை அறிந்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.
தற்போது கொரோனா தொற்று காரணமாக நாடு எதிர்கொண்டுள்ள சூழ்நிலை குறித்து கலந்தாலோசிக்க அனைத்து கட்சிகள் மாநாடு ஒன்றை நடத்துவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் அழைப்பு விடுத்தார்.