July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்தில் ஒரே நாளில் 1200 பேருக்கு கொரோனா; 5 மாவட்டங்களில் 1000 ஐ கடந்தது கொரோனா தொற்றாளர்கள்!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2,624 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் இரண்டாவது நாளாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2500 ஐ கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் 51 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும், ஏனையோரில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுன்கு ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் நேற்றைய தினம் (திங்கட் கிழமை) மேல் மாகாணத்தில் மாத்திரம் 1,234 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். அதற்கமைய கம்பஹாவில் 551 தொற்றாளர்களும், களுத்துறையில் 326 தொற்றாளர்களும், கொழும்பில் 321 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் (திங்கட் கிழமை) அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் பதுளை மாவட்டத்தில் 23 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 13 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 36 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும், நுவரெலியா மாவட்டத்தில் 184 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 177 பேரும், காலி மாவட்டத்தில் 170 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 128 பேரும், கண்டி மாவட்டத்தில் 50 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 46 பேரும், யாழ். மாவட்டத்தில் 109 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 22 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை மொத்தமாக 128,530 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் 26 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டது.

அதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 827 ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் (இருவர்), காலி, ஹெட்டிபொல, பல்லேவெல, கண்டி, மத்துகம, பாதுக்க, நேபட (இருவர்), மீகஹகொட, களுத்துறை (இருவர்), அக்குரஸ்ஸ, மொரொன்துடுவ, அனுராதபுரம், கொழும்பு – 06, களுஅக்கல, மொறட்டுவை, மல்வானை, பொரளை, கொழும்பு – 15, கந்தானை, மாஸ்வெல, வத்தேகம மற்றும் மாலபே ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 26 பேரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளனர். இவர்களில் 3 மாத சிசு ஒன்றும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.