யாழ்.மாநகர சபையின் செயற்பாடுகளை முடக்கும் வகையான செயற்பாடுகளை அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது என்று யாழ். மாநகர மேயர் சட்டத்தரணிவி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இதன் ஓர் அங்கமாகவே யாழ்.மாநகர சபையின் தண்டம் அறவிடும் பணியாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தமிழர்களை அச்சமான சூழ்நிலையில் வைத்திருக்க அரசு எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
யாழ். மாநகர சபையின் தண்டம் அறவிடும் பணியாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“யாழ்.மாநகர சபையின் செயற்பாடுகளை முடக்கும் வகையான செயற்பாடுகளை அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
என்னை கைது செய்ததன் மூலம் சபையால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை முழுமையாக முடக்கிவிடலாம் என்றே அரசு நினைத்தது. ஆனாலும், அரசின் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை எதிர்த்து கட்சி பேதங்கள் இன்றி அனைத்துத் தரப்பினர்களும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக அரசின் திட்டம் கைகூடவில்லை.
இதன் தொடர்ச்சியாக இப்போது சபையின் தண்டம் அறவிடும் பணியாளர்கள் 5 பேர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணை அழைப்பு என்பது தமிழ் மக்களுக்கு அரசு விடும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட வேண்டும்.விசாரணைக்கு அழைக்கப்பட்ட பணியாளர்களுக்கு வேண்டிய சட்ட உதவிகளை, மாநகர மேயராகவும், சட்டத்தரணியாகவும் நிச்சயம் செய்வேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.