கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் (இடுகம) தற்போதுள்ள ரூ.1,360,922,969.24 இருப்பை தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 1,752,402,793.24 ஆகும். இதுவரை செலவிடப்பட்ட தொகை ரூ .391,479,824.00. இது சேகரிக்கப்பட்ட மொத்த தொகையில் 23% ஆகும்.நிதியின் தற்போதைய இருப்பு – ரூ. 1,360,922,969.24
தடுப்பூசிகளுக்கு அரசாங்கம் செலவிட எதிர்பார்க்கும் தொகையுடன் ஒப்பிடும் போது தற்போதையமிகுதி இருப்பு மிகவும் சிறிய தொகையாகும். எனினும் நிதியத்தின் இருப்பை தடுப்பூசிக்கு பயன் படுத்துவதன் முக்கியத்துவத்தை நிதியத்தின் முகாமைத்துவ சபை சுட்டிக் காட்டியுள்ளது.
நிதியத்தின் பணம் செலவிடப்பட்ட விதம் பின்வருமாறு.
தொற்றுநோய் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்
பி.சி.ஆர் சோதனை தொடர்பான செலவுகள் – 42,605,812.00
விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு – 67,543,967.00
தனிமைப்படுத்தலுடன் தொடர்புடைய செலவுகள் – 38,031,065.00
நிர்வாக செலவுகள் – 3,000.00
மொத்தம் – 391,479,824.00
செலுத்த வேண்டியவை
தடுப்பூசி ஏற்றல் தொடர்பான செலவுகள் – 41,545,980.00
10 அம்புலன்ஸ் வண்டி கொள்வன- 194,000,000.00
ஐ.சி.யூ படுக்கைகள் கொள்வனவு – 7,750,000.00
செலுத்தப்பட்ட மற்றும் செலுத்தப்பட வேண்டிய மொத்த செலவு- 391,479,824.00
இந்த செலவுகள் அனைத்தும் சுகாதார அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொது மக்கள்,உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் சிலர் இட்டுகம கொவிட் நிதியத்திற்கு பணத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். கொவிட் -19 நிதிக்கு சர்வதேச நிதி நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் பங்களிக்கவில்லை
சர்வதேச சட்டத்தின் படி, வெளிநாட்டு உதவி மற்றும் நன்கொடைகள் திறைசேரிக்கே வழங்கப்படுகின்றன.இந்த நிதியத்திற்கும் சர்வதேச அமைப்புகளின் நன்கொடைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கொவிட் 19 நிதியத்திற்கு 2020 ஆம் ஆண்டில் அதிகமான பொதுமக்களால் நன்கொடைகள் கிடைக்கப் பெற்ற போதும், 2021 ஏப்ரல் மாதம் வரை கிடைக்கப் பெற்ற சராசரி மாத நன்கொடை சுமார் ரூ .7 மில்லியன் ஆகும்.
இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் பரவிய தகவல்கள் உண்மையல்ல என்றும் 2020 ஆம் ஆண்டிற்கான நிதியத்தின் கணக்குகள் கணக்காய்வுக்காக தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் நிதியத்தின் முகாமைத்துவ சபை தெரிவித்துள்ளது.