இலங்கையில் இம்மாதம் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கொவிட் 19 தொற்று நோயை ஒழிப்பது தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் ஜனாதிபதி நடத்திய கலந்துரையாடலையத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடக பிரிவு, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் தினம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
அதே போல் இலங்கையின் வலுவான சுகாதார கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த சுகாதார ஊழியர்கள் ஒன்றிணைந்து ஏனைய நாடுகளை போன்று கொரோனாவை வெற்றி கொள்ள முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு எல்லா சூழ்நிலைகளிலும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சுகாதார துறையினரின் ஆலோசனைகளை கடைப்பிடிப்பதன் ஊடாக மக்களின் அர்ப்பணிப்பும் மிக முக்கியமானது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.
அதேபோல், இந்த கட்டுப்பாடுகளின் போது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், நாட்டின் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் பராமரித்துச் செல்ல உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.