July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாட்டின் நிலைமை மோசமான கட்டத்தில்; மக்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்’; ரணில் விக்ரமசிங்க அவசர வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் உச்சத்தை நாடு எதிர்கொண்டுள்ளதாகவும், இதை தற்போது கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் பல உயிர்களை இழக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொவிட்-19 வைரஸ் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து குழுக்களும் தோல்வியடைந்துள்ளன எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் விசேட காணொளியொன்றை அவர்  வெளியிட்டுள்ளார். அந்தக் காணொளியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் இன்று கொரோனா வைரஸின் உச்சகட்டத்தை எதிர்கொண்டுள்ளோம். மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு மோசமடைந்து வருகிறது. கொவிட் -19 பேரழிவு தற்போது இலங்கை முழுவதும் பரவி வருகிறது. நாட்டில் தடுப்பூசிகளின் பற்றாக்குறை உள்ளது.

ஒக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது. வென்டிலேட்டர்களின் பற்றாக்குறை உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகளின் பற்றாக்குறை உள்ளது. மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன.

இந்த கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். எங்கள் மருத்துவ ஆலோசனை மற்றும் சுகாதார ஆலோசனைகளின்படி இப்போது நாம் முடிவுகளை எடுக்கவில்லை என்றால், நாங்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுப்போம்.

வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (ஐ.எச்.எம்.இ) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, நோயாளிகளின் விரைவான வளர்ச்சியின் உச்சத்தை நமது நாடு அடைய முடியும். மேலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்படலாம்.

எனவே, இந்த முக்கியமான கட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இது அரசாங்கத்தின் பெயரைக் காப்பாற்றும் போராட்டம் அல்ல. அதேபோல, இது ஒரு அரசியல் யுத்தமும் அல்ல.

உண்மையில், இது மக்களின் உயிரைக் காப்பாற்றும் போராட்டம். நாங்கள் அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என கேட்கவில்லை. இந்த நாட்டின் அரசியலமைப்பின் படி, நாட்டின் பொறுப்பு அமைச்சரவையிடம் உள்ளது. இந்த தொற்று நோயிலிருந்து நமது மக்களை பாதுகாக்க ஜனாதிபதி, அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவைக் முழு அதிகாரங்களையும் எடுக்க வேண்டும்.

கொவிட்டை தடுப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுக்கள் தோல்வியடைந்துள்ளன. முன்பு கூறப்பட்டவற்றின் தீவிரத்தன்மை இந்தக் குழுக்களால் செயல்படுத்தப்படவில்லை. மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். இதற்கான அதிகாரங்களை அமைச்சரவைக்கு வழங்கும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஜனாதிபதியும், அமைச்சரவையும் உடனடியாக இந்த அதிகாரங்களை ஏற்க வேண்டும்.

இந்த வாரம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரிடம் பேசுங்கள். அவர்களின் ஆதரவையும் கருத்தையும் பெறுங்கள். அவர்களுக்கும் அந்த ஆதரவு தேவை. விரைவாக செயல்படுங்கள். இப்போது செயல்படாவிட்டால் பல உயிர்களை இழக்க நேரிடும். நாட்டு மக்கள் மீது அனுதாபம் இருந்தால், அமைச்சரவை இந்த பொறுப்பை ஏற்க வேண்டும். அனுபவமுள்ளவர்கள் அங்கே இருக்கிறார்கள். அதன்படி செயல்பட நான் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.