
இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்களை திருப்பி அழைத்து வருவதற்கான திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான நடவடிக்கைகள் ஒரு வாரம் கழித்து எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கம்பஹாவில்,வெரெல்லவத்த பகுதியில் அமைக்கப்பட்டுவரும் 2000 படுக்கைகள் கொண்ட கொவிட் சிகிச்சை நிலைய நிர்மாண பணிகளை ஆய்வு செய்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப,இலங்கை மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்.இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதை இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கின்றோம்.
எனினும்,மருத்துவ தேவைக்காகவும் மற்றும் ஏனைய தேவைகளுக்காகவும் இந்தியாவுக்கு சென்ற நபர்களை திருப்பி அழைத்து வருவது தொடர்பாக ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவோம் என்று நம்புகிறோம்.
ஒரு வாரத்திற்கு பிறகு அவர்களை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் நாட்டிற்கு அழைத்து வர உத்தேசித்துள்ளோம்.
இலங்கையில் மாத்திரமல்ல,, உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாத் துறை தற்போது நெருக்கடியில் உள்ளது.எனவே இந்த தொற்றுநோயுடன் நாம் வாழப் பழக வேண்டும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.