சீனாவின் “சினோபார்ம்” கொவிட் தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்வது குறித்து சீன தூதருடன் கலந்துரையாடி வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், “சினோபார்ம்” தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை நாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் இந்த தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சீனத் தூதரகம், இலங்கையில் சீன தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான வசதிகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே இலங்கைக்கு சீனாவிலிருந்து காலாவதி திகதியை அண்மித்த கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.
எனினும் சீனாவின் “சினோபார்ம்” தடுப்பூசி சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இவை காலாவதியாக இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதாகவும் அமைச்சர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டினார்.
சீனாவின் “சினோபார்ம்” கொவிட் தடுப்பூசியின் அவசர கால பாவனைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதியளித்ததை தொடர்ந்து இலங்கை நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை ஆரம்பித்தது.
இரண்டாவது நாளாக “சினோபார்ம்” தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டதுடன், 2500 மேற்பட்டோருக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.