October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ஒரே நாளில் 2500 ஐ தாண்டியது கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை!

இலங்கையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2659  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது இலங்கையில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை ஆகும்.

அதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 125,906 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே கொவிட்-19 தொற்றுக்குள்ளான 20,657 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாட்டில் சிகிச்சை பெற்று வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதேவேளை, இலங்கையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தொற்றுக்குள்ளான 1,365 பேர் குணமடைந்துள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கையும் 104,463 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் மேலும் ஒரு கர்ப்பிணி தாய் கொரோனா தொற்று காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு  தெரிவித்துள்ளது.

காலி, கராப்பிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, யாழ்ப்பாணத்தில் வடமராட்சி உடுப்பிட்டியைச் சேர்ந்த 88 வயதுடைய முதியவர் கொவிட் -19 நோயினால் உயிரிழந்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில் கொவிட் -19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 6,965 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.