November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் செப்டம்பருக்குள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகலாம்”; வாஷிங்டன் பல்கலைக்கழகம் தகவல்!

இலங்கையில்  செப்டம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் சுமார் 20,876 பேர் வரை உயிரிழக்க நேரிடும் என்ற தகவலை, அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 நோய் தொற்று எண்ணிக்கை, மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் மற்றும் இறப்புகள் பற்றிய கணிப்புகளை உத்தியோகபூர்வமாக வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.

இந்த நிலையில், இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறினால் தற்போதைய கணிப்புகளின் படி,  எதிர்கால நிலைவரம் தொடர்பிலான கணிப்பீட்டை சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் ஜூன் 14 அன்று தினசரி இறப்பு எண்ணிக்கை அதி உச்சத்தை அடையும் என எதிர்பார்ப்பதாக  குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 264 இறப்புகளாக இருக்கும் எனவும் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதுவேளை, இந்த எண்ணிக்கை படிப்படியாக  குறைவடைந்து 2021 செப்டம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் 88 தினசரி இறப்புகள் பதிவாகலாம் எனவும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் கணிப்புகள் காட்டுகின்றன.

இதற்கமைய மருந்து வளங்களின் பயன்பாடுகள் இந்த ஆண்டு ஜூன் 16 ஆம் திகதி உச்சமாக இருக்கும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த காலப்பகுதியில் மருத்துவமனை படுக்கைகளின் தேவை 17,049 ஆகவும் தீவிர சிகிச்சை பிரிவின் படுக்கைகளின் தேவை 3,451 ஆக இருக்கும் என சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவிக்கின்றது.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் இந்த அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, இந்த ஆராய்ச்சி அறிக்கையில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வாஷிங்டன் பல்கலைக்கழகம் தொற்று நோயை பற்றி ஒரு முக்கியமான ஆய்வை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த அறிக்கைக்கு அமைய செயற்பட்டு வரும் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள்  வெற்றிகரமாக கொரோனாவை கட்டுப்படுத்தி வருவதாகவும் கூறினார்.

எனவே இலங்கை இந்த நாடுகளை முன்மாதிரியாக எடுத்து கொண்டு மக்கள் தொகையில் 70% பேருக்கு தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இலங்கை விரைவாக செயல்பட்டால் தாமதமின்றி பேரழிவைத் தவிர்க்க முடியும் எனவும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வாஷிங்டன் பல்கலைக்கழக அறிக்கையை மேற்கோள்காட்டி கூறியுள்ளார்.