நாட்டில் போலி டொலர் நாணயத்தாள்களை அச்சிட்டு விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதனால் டொலர் நாணயத்தாள் பயன்பாட்டின்போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியதாவது,
கந்தளாய், அநுராதபுரம் மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளில் கடந்த காலங்களில் போலி நாணயத்தாள்கள் அச்சிட்டமை தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தேக நபர்கள் இலங்கை ரூபாய் நாணயத்தாள்களை இவ்வாறு அச்சிட்டு, அதனை பொதுமக்கள் மத்தியில் புழக்கத்திற்கு கொண்டு செல்லவும் முயற்சித்திருந்தனர்.
இந்த நிலையில், ரூபாய் நாணயத்தாள்களை போன்று, டொலர்களும் அச்சிடப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 100 டொலர்கள் பெறுமதியான நாணயத்தாளே போலியாக அச்சிடப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அதனால் இது தொடர்பில் அனைவரும் கவனமாக செயற்பட வேண்டும்.
டொலர்களை பரிமாற்றம் செய்யும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட டொலர்களை பயன்படுத்தும் ஏனைய நிறுவனங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெற்றால் 011-2326670, 011-2320145 ஆகிய இலங்கங்களை தொடர்பு கொண்டு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அறிவிக்க முடியும்.
இந்நிலையில் 1000 ரூபாய் மற்றும் 5000 ரூபாய் நாணயத்தாள்கள், டொலர்கள் கிடைக்கப் பெற்றால் அவை தொடர்பில் நன்கு கவனிக்க வேண்டும். அது தொடர்பில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் அது தொடர்பில் பொலிஸாருக்கு உடனே அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.