இந்த வார இறுதிக்குள் அனைத்து தனியார் பஸ் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த வாரத்திற்குள் தனியார் பஸ் சேவையை இடை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தனியார் பஸ் ஊழியர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடமும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடமும் கோரியுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜெரத்ன தெரிவித்தார்.
ஆனால் தங்கள் கோரிக்கையை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை என குறிப்பிட்ட அவர் சுகாதாரத் துறை உள்ளிட்ட முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது போன்று பஸ் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
45,000 ஊழியர்கள் தனியார் பஸ் சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில், அவர்களிடமிருந்து தினசரி வசூலை சேகரிப்பதால் உரிமையாளர்களுக்கும் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போக்குவரத்து ஊழியர்களிடையே வைரஸ் பரவல் ஏற்பட்டால் நாட்டின் பொது போக்குவரத்தை முன்னெடுப்பதில் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.