பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் சிங்கள மொழியில் வழங்கப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விசனம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அதிகாரிகள் மொழிக் கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதில் குறைவான அணுகுமுறையைக் கையாள்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அவசர நிலைமையைப் பிரகடனப்படுத்தக் கோரி, சுமந்திரன் எம்.பி. பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், அவரது பிரேரணை சுகாதார அமைச்சுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் கடிதம் அவருக்கு சிங்கள மொழியில் வழங்கப்பட்டுள்ளது.
“தமிழ் உறுப்பினர்களுக்கு சிங்கள மொழியில் கடிதங்கள் அனுப்பப்படுகின்றது. நாம் இந்தப் பிரச்சினையை எத்தனை தடவைகள் முன்வைத்துள்ளோம்?
பாராளுமன்ற ஊழியர்களுக்கான சுற்றறிக்கைகளும் சிங்களத்தில் மட்டுமே வழங்கப்படுவதாக அறியக் கிடைக்கிறது.
அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இரு மொழிக் கொள்கையை, குறைந்தபட்சம் பாராளுமன்றத்திலேனும் அமுல்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறான உரிமை மீறல்கள் தொடர்வது ஏன் கவனிக்கப்படுவதில்லை?”
என்று சுமந்திரன் எம்.பி. பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.