
அறிகுறிகளை வெளிப்படுத்தாத கொரோனா தொற்றாளர்களை வீட்டில் வைத்து சிகிச்சை அளிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஒளடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவது குறித்த முறையான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது. நாட்டில் ஏராளமான கொரோனா தொற்றாளர்கள் வீடுகளில் இருப்பதாகவும் அவர்களுக்கு மருத்துவமனை வசதிகளை வழங்குவதற்கு தாம் முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் அறிகுறிகள் இல்லாத நோயாளிகளை வீடுகளில் வைத்து அவதானிப்பதோடு, அவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பொருத்தமான தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
தற்போது இலங்கையில், 105 கொரோனா சிகிச்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், அவற்றில் 19,000 வரையான படுக்கை வசதிகள் இருப்பதாக சுகாதார அமைச்சு கூறுகின்றது.
மேலும், சீதுவ மற்றும் பூசா பகுதிகளில் 1,500 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையங்களை இராணுவம் தயார் செய்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரதான வைத்தியசாலைகளிலும் கொரோனா சிகிச்சைக்காக ஒரு வார்ட்டை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் இன்று (சனிக்கிழமை) மாலை வரை 970 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 122,308 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனிடையே கொரோனா தொற்றுக்குள்ளான 1,335 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 103,098 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு, நாடளாவிய கொரோனா சிகிச்சை மையங்களில் 18,446 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தொற்றுக்குள்ளான 764 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.