January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களாக தேவாலயங்களை வழங்க இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் முடிவு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்புடன் ஏற்பட்டுள்ள சிகிச்சை மையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தமது தேவாலயங்கள் மற்றும் கட்டிடங்களை தனிமைப்படுத்தல் மையங்களாக பயன்படுத்த முடியும் என இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தோடு தங்கள் தேவாலயங்கள் மற்றும் மையங்களை தடுப்பூசி திட்டங்களை முன்னெடுப்பதற்கு வழங்க தயாராக உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அன்றாட நடவடிக்கைகளில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக  கடைப்பிடிக்குமாறும் அனைத்து மக்களையும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்படும் பகுதிகளில் தினசரி ஊதியம் பெற்று வாழும் குடும்பங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, வெளிநாடுகளில் பணிபுரியும் ஏராளமான இலங்கையர்கள் நாட்டிற்கு திரும்ப முடியாது சிரமப்படுவதாகவும், செலவு குறைந்த தனிமைப்படுத்தல் வசதிகள் இல்லாமை அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை எனவும் இலங்கையின் தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் தலைவர் ரெவ். எபினேசர் ஜோசப் கூறினார்.

நாட்டிற்கு அதிகமான அந்நிய செலாவணியை பெற்றுத்தந்து நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகித்த இவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக அனைத்து அமைப்புகளும் இணைந்து செயற்படுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

அத்தோடு நாடு இந்த இடரிலிருந்து மீண்டுவர அனைவரும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.