கல்முனை விவகாரத்தில் தமிழ்- முஸ்லிம் மக்களின் உறவை சீர்குலைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளை, சுன்னத் வல் ஜமாஅத் என்பன இணைந்து நேற்று கல்முனையில் நடத்திய ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளது.
கல்முனை விவகாரம் தொடர்பாக அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்முனையில் உள்ள மக்களின் பூர்விகம், வரலாறு, எல்லைகள், கல்முனை வாழ் மக்களின் வாழ்வாதாரம், மக்களின் பாசப் பிணைப்பு என எதையும் அறியாத வெளிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் சிலரும் கல்முனை தொடர்பாக பிழையான சித்தரிப்புக்களை பரப்பி வருவதாக அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் டாக்டர் எஸ்.எம். அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
“அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை என்பன முஸ்லிம்களுக்கு சொந்தமானதாக கூறியிருந்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் தான் கிழக்கின் அதிக சுகாதாரத்துறை பணியாளர்கள் இருக்கிறார்கள். அதில் இருக்கும் எல்லோரும் முஸ்லிம்கள் அல்ல. தமிழ், சிங்கள மக்களும் அதிகளவில் பணியாற்றுகிறார்கள்.
யுத்த காலத்தில் கல்முனையில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்த போது, மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கே அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை உருவாக்கப்பட்டது.
அங்கு சிகிச்சை வழங்குவதிலும், சிகிச்சை பெறுவதிலும் மூவின மக்களும் அங்கம் வகிக்கின்றனர். அது தமிழ் மக்களுக்கு மனதுக்கு நெருக்கமான வைத்தியசாலையாகவும் அமைந்துள்ளது.
இதேபோன்றுதான், கல்முனை உப பிரதேச செயலக விவகாரமும். இவர்களின் இனவாத, பிரதேசவாத கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களின் தமிழ்- முஸ்லிம் உறவுகளை சீரழித்து குளிர்காய எடுக்கப்படும் அரசியல் முன்னெடுப்புக்களை நாம் வன்மையாக எதிர்க்கிறோம்.”
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.