November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் தடுப்பூசிகளை கொண்டுவரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

கொவிட் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குதல் மற்றும் நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொவிட் தடுப்பு குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

அதன்போது குறுகிய காலத்தில் முடியுமானளவு தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டு வரவும், அவற்றை மக்களுக்கு வழங்கவும் நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து கிடைக்கப்பெற்ற 6 இலட்சம் “சைனோபாம்” தடுப்பூசிகள் சுகாதார அமைச்சிடம் உள்ளன. இந்த தடுப்பூசி 51 நாடுகளில் 55 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, அந்த நாடுகளின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி அந்த தடுப்பூசிகளை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கு உள்ள வாய்ப்புகளை கண்டறியுமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு “அஸ்ட்ரா செனிக்கா” தடுப்பூசியின் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தத் தடுப்பூசிகள் மேலதிகமாக உள்ள நாடுகளில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு தேவையான கலந்துரையாடல் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இதன்போது அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்களை தனிமைப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தல் மூலம் நோய் பரவுவதை தடுப்பதற்கு அதிகபட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.